ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர்

குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 4 கொலை சம்பவங்கள் தொடர்பாக அ.தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதன்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக செல்கிறது. சட்டத்தின் முன் யாரும் தப்ப முடியாது என முதல்-அமைச்சர் நேற்று கூறிய நிலையில் நான்கு கொலைகள் நடந்துள்ளது என்று கூறி முக்கிய பிரச்சினைகளை தான் கவன ஈர்ப்பாக கொண்டு வருகிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
சிவகங்கையில் நடந்த கொலைக்கு குடும்பத்தகராறு காரணம். மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது. கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஈரோடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது. குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு குண்டர் சட்டங்களில் கைது செய்யப்படுகின்றனர்.
தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது. 2023ஆம் ஆண்டில் 49280 ஆக இருந்த குற்றச் சம்பவங்கள், தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2024ஆம் ஆண்டில் 31438 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்களை குறைத்திருக்கிறோம்
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் பழிக்குப் பழிவாங்குவோரின் கொலைகளும் குறைந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா..? அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி, சாத்தான்குளம் பிரச்னையை நீங்கள் மறந்துவிட கூடாது. குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களை போன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என நான் கூறவில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.