ரெயில்களில் பயணிக்கும்போது கற்பூரம் ஏற்றினால் சிறை - ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
ரெயில்வே சட்டப்படி, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
திருச்சி,
திருச்சி கோட்ட ரெயில்வே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக தெரியவந்துள்ளது. எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், கியாஸ் சிலிண்டர், அமிலம், பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் போன்றவற்றை ரெயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது. எனவே கற்பூரம், விளக்கு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயில்களில் பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவர்.
ரெயில்வே சட்டப்படி, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரெயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றினால், சக பயணிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகர், ரெயில் பெட்டி உதவியாளர்கள், ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கலாம். மேலும் `139' என்ற உதவி எண்ணிலும் தகவல் சொல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.