26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Dec 2024 3:55 PM IST
தி.மு.க. அரசுக்கு வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்று சொல்வதற்கு தி.மு.க. அரசுக்கு வெட்கமாக இல்லையா? நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் பல்கலைக்கழக வளாகத்தில் சி.சி.டி.வி. பொருத்தப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு மரியாதை இல்லை. இனி வழக்கமான அரசியல் செய்யப்போவதில்லை. - அண்ணாமலை
- 26 Dec 2024 3:45 PM IST
தி.மு.க. அரசுக்கு எதிராக சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பகிரங்கமாக வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவியின் முழு விவரங்களையும் எப்ஐஆரில் பதிவு செய்ததற்கும், அதை பகிரங்கமாக வெளியிட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. அரசுக்கு எதிராக நாளை பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். போராட்டத்திற்காக ஆங்காங்கே ஒன்றுகூடாமல், ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனும் தனது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை நடத்துவார்கள். நாளை காலை 10 மணிக்கு என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தப்போகிறேன், 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்றும் அண்ணாமலை கூறினார்.
- 26 Dec 2024 3:26 PM IST
17 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது
கலை, கலாச்சாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பான சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
- 26 Dec 2024 3:13 PM IST
தமிழகத்தில் இன்று முதல் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (26-12-2024) அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 8.30 மணியளவில் மேலும் வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 26 Dec 2024 2:36 PM IST
வேங்கைவயல் விவகாரம்: திமுக அரசு தலைகுனிய வேண்டும் - ராமதாஸ்
வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, இதற்காக திமுக அரசு தலைகுனிய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். குற்றவாளி யார் என்றுகூட காவல்துறையால் துப்பு துலக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 26 Dec 2024 1:49 PM IST
பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் நாளில் 311 ரன்கள் குவிப்பு
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன உஸ்மான் கவாஜா, அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.
- 26 Dec 2024 1:06 PM IST
மாணவி பாலியல் வன்கொடுமை - அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- 26 Dec 2024 12:45 PM IST
அண்ணா பல்கலை.மாணவி பாலியல் புகார் தொடர்பான எப்.ஐ.ஆர் விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் எப்.ஐ.ஆர் விவரங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தாலோ, செய்தியில் ஒளிபரப்பினாலோ கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பட்டாலோ, சமூகவலைதளத்தில் பகிர்ந்தாலோ நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டுள்ளது.
- 26 Dec 2024 12:35 PM IST
அண்ணா பல்கலை.மாணவி பாலியல் புகார் தொடர்பான எப்.ஐ.ஆர் விவரத்தை காவல்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆன்லைன் எப்.ஐ.ஆரில் பெண்ணின் விவரம் உள்ளிட்டவை பிளாக் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களை யாரும் பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது.