போக்சோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து

போக்சோ வழக்கில் இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன் பிளஸ்2 படித்தபோது தன்னுடன் படித்த மாணவியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டதில் அவர் கர்ப்பமானார். இதனை அறிந்த சிறுமியின் தாய், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபரை கைதுசெய்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், 25 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து அந்நபர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ”அவரை சிறைக்கு அனுப்பினால் தானும் குழந்தையும் நிராதரவாக விடப்படுவோம்" என பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, பெண் மற்றும் குழந்தையின் நலன் கருதி, இளைஞருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.






