2026 சட்டசபை தேர்தலிலும் 5 முனை போட்டிதான்; முடிவு எப்படி இருக்கும்?

விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இதனால் சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள். மக்கள் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். இதற்கு கடந்த கால தேர்தல்களில் அமைந்த கூட்டணிகளே சாட்சி.
தமிழ்நாட்டில் இன்றைக்கு தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எதிரும் புதிருமான கட்சி. ஆனால், 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தன. அதேபோல், இன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தன. பா.ம.க.வும், த.மா.கா.வும் அதே கூட்டணியில்தான் அங்கம் வகித்தன. மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிலைமை அப்படியே மாறியது. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அங்கம் வகித்தன. புதிதாக உதயமான தே.மு.தி.க.வும், பா.ஜ.க.வும் தனித்து போட்டியிட்டன.
4 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் நிலைமை மாறியது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க. தனித்து களம் கண்டது.
மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நிலைமை வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. தே.மு.தி.க. தலைமையில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கின.
பா.ம.க., பா.ஜ.க., சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. 6 முனைப்போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.
அ.ம.மு.க., மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணியை அமைத்தன. சீமான் தனித்து போட்டியிட்டார். 5 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இப்படி, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது? என்பதை இனி பார்ப்போம்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. தற்போதைய கூட்டணியை அப்படியே தக்கவைத்துக்கொள்ள தி.மு.க. முயன்று வருகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே, அக்கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் பிரிந்து நிற்கும் நிலையில், கூட்டணி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை அ.தி.மு.க.வுக்கு உள்ளது.
வழக்கம்போல, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என சீமான் அறிவித்துவிட்டார். பா.ஜ.க. தலைமையில் தனி அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்று இப்போதே எல்லோரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். ஆனால், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர், '2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும்' என்று அறிவித்துள்ளார்.
இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் வரும் தேர்தலில் 5 முனைப் போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இதில், வெற்றி வாய்ப்பு யாருக்கு? என பார்க்கும்போது, வாக்குகள் சிதறும் என்றே தெரிகிறது. வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அந்த வெற்றி அமையும் என்று கூறப்படுகிறது. என்றாலும், வாக்குகள் சிதறுவது ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.