உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள் - கே.என்.நேரு தகவல்

சட்டசபையில் நகராட்சித்துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
சட்டசபையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
1989ம் ஆண்டு நான் முதல் முதலில் அமைச்சராக பொறுப்பேற்றேன். அமைச்சராக எப்படி பணியாற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில், முதலமைச்சர் ஸ்டாலினும் எனக்கு பெரிய இலாகாவை ஒதுக்கியிருக்கிறார்
இந்த பிறப்பு அவர்களுக்கான பிறப்பு என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்"
▪️ கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.
▪️ கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
▪️ ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
▪️ ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
▪️ நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
▪️ நாய்க்கடி பிரச்சினைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
▪️ புதிய பேருந்து நிலையங்கள்:
கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர்
▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு:
கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்
▪️ புதிய சந்தைகள்:
தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர்,
▪️ சந்தைகள் புதுப்பித்தல்:
திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை
▪️ வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்
▪️ புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்:
கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம்
▪️ புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்:
கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம்
▪️ புதிய பாதாள சாக்கடை வசதி:
தென்காசி, இராணிப்பேட்டை
▪️ சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னும் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் சொத்து வரி குறைவாகவே உள்ளது. 1000 சதுர அடிக்கு மும்பை - ரூ.10271, கொல்கத்தா - ரூ.5850, பெங்களூர் - ரூ.5783, டெல்லி - ரூ.1302, சென்னை - ரூ.570, மதுரை - ரூ.484, கோவை - ரூ.340ஆக சொத்து வரி உள்ளது.
▪️ மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
▪️ 2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்
மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே வரி உயர்த்தப்பட்டது என்று ஏற்கனவே அரசு விளக்கம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது.
▪️ 'நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
▪️ காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் .
▪️ சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது.
▪️ ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
▪️ குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
▪️ மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பொருட்டு நகர்ப்புர உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
▪️ பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப் பாதிப்பினைத் தவிர்க்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
▪️ சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
▪️நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி செலவில் மெரினா கடற்கரை மேம்படுத்தப்பட உள்ளது. வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
▪️ வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
▪️ திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
▪️ சென்னை பெருநகரை அழகுபடுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக நடைபாதைகளை பயன்படுத்தும் விதமாக, வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து தட சாலைகளில் 200 கி.மீ. நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
▪️ சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். ஏரி குளங்களை சீரமைத்து கொள்ளளவை அதிகரிக்கவும் வெள்ள பாதிப்பை தவிர்க்கவும் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
▪️ மாநகராட்சி பள்ளிகளில் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
▪️ பேருந்து தட நாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
▪️ முக்கிய இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.
▪️ கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சி கூடங்கள் நவீன வசதிகளுடன் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
▪️ மயான பூமிகளில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
▪️ `பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்டமாக தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.750 கோடியும், விருதுநகர் நகராட்சிக்கு ரூ.50 கோடியும், தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
▪️ சென்னையில் ரூ.740.37 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
▪️ புழலிலுள்ள பழைய 300 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரூ.430.12 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் புனரமைக்கப்படும்.
▪️ போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக திருக்கழுக்குன்றம், மீஞ்சூர், திமிரி, அரூர், பாலக்கோடு, கெலமங்கலம், பருகூர், தேன்கனிக்கோட்டை, செஞ்சி, சுவாமிமலை, வல்லம், தரங்கம்பாடி, நத்தம், கோட்டையூர், ஆலங்குடி, ஜலகண்டாபுரம், கருப்பூர், வாழப்பாடி, வடுகப்பட்டி (தே), வேலூர் (நா) ஆகிய பேரூராட்சிகளில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும்.
▪️ தூத்துக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள், ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.62.95 கோடி மதிப்பீட்டில் புதிய சந்தைகள் அமைக்கப்படும்.
▪️ மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ரூ.311.78 கோடி மதிப்பீட்டில் 69,500 புதிய எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கப்படும். 45,700 பழைய தெருவிளக்குகள் புதிய எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.