சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்


சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 18 Dec 2024 3:50 PM IST (Updated: 18 Dec 2024 4:29 PM IST)
t-max-icont-min-icon

'யூடியூபர்' சவுக்கு சங்கர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை இழிவுப்படுத்தி பேசிய வழக்கில் கடந்த மே மாதம் 4-ந்தேதி அன்று தேனியில் உள்ள தங்கும் விடுதியில் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் 2½ கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசாரால் கஞ்சா வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் 'யூடியூப்' மூலம் தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பு கருத்துகளை முன்வைத்து வந்தார். அதே வேளையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று சென்னை வந்து சவுக்கு சங்கரை கைது செய்து மதுரை அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், இன்று மதுரை போதைபொருள் சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் போலீஸ் காவலுடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story