கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றவர் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன். இவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் இன்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் முதல் அந்தவாலிபருடைய தாயார் இந்த மருத்துவனையில் புற்றுநோய் பிரச்சனைக்காக இதே டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரது தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்து, டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை அந்த இளைஞர் ஏற்கனவே சந்தித்து கேட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அந்த வாலிபர், டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை கத்தியால் குத்தியிருக்கின்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் வாலிபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வாலிபர் விக்னேஷை போலீசார் அழைத்து சென்றனர்.