கனமழையிலும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் - ஆவின் தகவல்
பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஆவின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 லட்சம் லிட்டர் பால் 25 ஆயிரம் பாக்கெட் UHT பால் மற்றும் 10 ஆயிரம் கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.