02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...


02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
தினத்தந்தி 2 Jan 2025 8:32 AM IST (Updated: 2 Jan 2025 9:49 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 2 Jan 2025 8:58 PM IST

    கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

    கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    தமிழ்நாட்டு விளையாட்டு துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்தி பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கேல் ரத்னா விருது பெற்ற குகேஷ், அர்ஜுனா விருது பெற்ற துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்!. தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • 2 Jan 2025 8:23 PM IST

    பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

    இந்தியாவிலேயே பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளது.

    பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் உள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும், தமிழ்நாட்டில் 0.7 என்ற அளவிலும் உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்

  • 2 Jan 2025 8:17 PM IST

    மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை பாதுகாப்பு படை முயற்சி; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    மேற்கு வங்காளத்தின் அமைதியை குலைக்க எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சிக்கிறார்கள் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

    அவர் கூறும்போது, வங்காளதேசத்தில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் நுழைய எல்லை பாதுகாப்பு படையினர் அனுமதித்து வருகின்றனர் என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதற்கு பின்னால் மத்திய அரசின் திட்டம் உள்ளது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

  • 2 Jan 2025 8:14 PM IST

    5 ஆண்டுகளில் முதன்முறையாக... மத்திய ஆயுத பாதுகாப்பு படையில் தற்கொலை விகிதம் 40 சதவீதம் சரிவு

    2023-ம் ஆண்டில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.) தற்கொலை விகிதம் 1 லட்சத்திற்கு 16.98 என்ற அளவில் இருந்தது. இந்த விகிதம் நடப்பு ஆண்டில் 40 சதவீதம் குறைந்து உள்ளது.

    இதன்படி, 2024-ம் ஆண்டில் இந்த விகிதம் 1 லட்சத்திற்கு 9.87 என்ற அளவில் உள்ளது. மத்திய உள்விவகார துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த படையில் 5 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த விகிதம் குறைந்துள்ளது. இதனால் முக்கியதொரு மைல்கல்லை அடைந்து சி.ஐ.எஸ்.எப். சாதனை படைத்துள்ளது.

  • 2 Jan 2025 7:19 PM IST

    பள்ளிகள் சீரமைப்பு தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்:  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    பள்ளிகளை தத்துக்கொடுப்பது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெளிவாக உள்ளது. அரசு செய்ய வேண்டிய வேலையை தனியார் பள்ளிகளிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகள் சீரமைப்பு தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  • 2 Jan 2025 7:06 PM IST

    காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

    தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த ஹஸ்ஸம் ஷாவான், நேற்றிரவு கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் இருந்தபோது, நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்து உள்ளது.

  • 2 Jan 2025 6:57 PM IST

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் ஆட்சி இருக்கும் வரை யாருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள். எனவே, பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான Spray, Emergency SOS Alarm உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை வந்ததற்கு, உங்களை போன்றே நானும் வருந்துகிறேன் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

  • 2 Jan 2025 6:40 PM IST

    கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் அதிகரிப்பு; அமைச்சரவை ஒப்புதல்

    கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 5-ந்தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story