சட்டமன்றத்தில் நேர்மையான விவாதம் நடத்த பல முறை முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி


சட்டமன்றத்தில்  நேர்மையான விவாதம் நடத்த பல முறை முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 27 Jun 2024 4:51 AM GMT (Updated: 27 Jun 2024 4:57 AM GMT)

விஷ சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் முதல்வர் தயங்குவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் தி.மு.க. முதல்-அமைச்சர் தயங்குவது ஏன்?

விஷ சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின்?

விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story