'மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம்' - அன்னபூர்ணா நிர்வாகம்


மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறோம் - அன்னபூர்ணா நிர்வாகம்
x
தினத்தந்தி 14 Sep 2024 1:32 PM GMT (Updated: 15 Sep 2024 8:51 AM GMT)

மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை,

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அதே சமயம், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்டார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், மத்திய மந்திரியை ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோவை பா.ஜ.க. நிர்வாகி சதீஷ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அன்னபூர்ணா நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த செப்டம்பர் 11-ந்தேதி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் கோவையில் நடைபெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் உரையாடலின்போது, அன்னபூர்ணா நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் கவுரவ தலைவரும், தென்னிந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான டி.சீனிவாசன், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு ஜி.எஸ்.டி. விகிதங்கள் விதிக்கப்படுவது பற்றிய பிரச்சினையை எழுப்பினார்.

இந்த உரையாடலின் செய்தித் துணுக்குகள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவியதால், அடுத்த நாள் சீனிவாசன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிதி மந்திரியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் கவனக்குறைவாக பகிரப்பட்டது. இது பல தவறான புரிதல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வெளியான விவகாரத்திற்காக 'எக்ஸ்' தளத்தில் பா.ஜ.க. மாநில தலைமை மன்னிப்பு கோரியுள்ளது. அதோடு, வீடியோவை எடுத்தவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேவையற்ற அனுமானங்கள் மற்றும் தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ளவும், கடந்து செல்லவும் நாங்கள் விரும்புகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story