உதகை- பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறப்பு


உதகை- பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறப்பு
x
தினத்தந்தி 4 Aug 2024 4:11 AM GMT (Updated: 4 Aug 2024 6:44 AM GMT)

உதகையில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.

நீலகிரி,

ஊட்டி -கூடலூர் சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு மத்தியில் பைக்காரா அணை உள்ளது. இந்த அணையில் உள்ள நீரை கொண்டு நீர்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பைக்காரா அணையில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மலைகள் மற்றும் வனத்திற்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பைக்காரா படகு இல்லம் இயங்கி வருகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பைக்காரா அணையில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.

இந்த படகு இல்ல சாலை, குண்டும் குழியுமாக பழுதடைந்து இருந்தது. எனவே, சாலையை சீரமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றன. இதனால் பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாத இறுதியில் சாலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன.

இந்த சூழலில் நீலகிரியில் மழை பெய்து வரும் நிலையில் படகு இல்லம் திறக்கப்படாமல் இருந்தது. பலத்த காற்று காரணமாக படகு இல்ல சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் உதகையில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளது. சாலை பணிக்காக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் மீண்டும் திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story