மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு


மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Oct 2024 12:34 PM IST (Updated: 14 Oct 2024 4:00 PM IST)
t-max-icont-min-icon

மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை,

தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

அப்போது, மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் தருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ்,

மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசில் இருந்து அழுத்தம் தருகின்றனர். மத்திய அரசின் கட்டளைகளை ஏற்றால் மட்டுமே நிதி ஒதுக்குவோம் எனக்கூறுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க முடியவில்லை.

முதல் தவணைக்கான தொகையான 573 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. அந்த தவணைக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மொத்தம் 32 ஆயிரத்து 298 பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய விஷயம். அந்த தொகையை மத்திய அரசு இன்னும் தரவில்லை. தற்போது அந்த சம்பள தொகையை நாங்கள் மாநில நிதியில் இருந்தே கொடுத்துக்கொள்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநில அரசுக்கு வழங்கவேண்டிய நிதியை மத்திய அரசு பல்வேறு காரணங்கள் கூறி நிறுத்தக் கூடாது உடனடியாக வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த முயற்சியை நாங்கள் கைவிடப்போவதில்லை.

ஒவ்வொரு பள்ளிகள் சார்ந்த கலைப்பண்பாட்டு கொண்டாட்டம், சிறப்பு குழந்தைகளுக்கான திட்டங்கள், எண்ணும் எழுத்தும் திட்டம், ஹை-டெக் லேப்ஸ் உள்பட பல்வேறு திட்டங்கள் மத்திய மாநில அரசு இணைந்தே நிதி வழங்குகின்றன. மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி ஒதுக்குகின்றன. ஆனால், தற்போது திடீரென மத்திய அரசு 60 சதவீத பணத்தில் கை வைக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலத்தில் நீங்கள் இந்த கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பணம் தருவோம் என்று மத்திய அரசு கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றார்.


Next Story