சுழன்றடித்த சூறாவளிகாற்று: திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை... பதற்றத்தில் அலறிய பயணிகள்


சுழன்றடித்த சூறாவளிகாற்று: திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை... பதற்றத்தில் அலறிய பயணிகள்
x
தினத்தந்தி 24 July 2024 9:22 PM GMT (Updated: 25 July 2024 2:40 AM GMT)

சூறாவளி காற்றுக்கு ஓடும் அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி,

பழனி பகுதியில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசியது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

பழனி திருவள்ளுவர் சாலையோரம் நின்ற வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்துக்கு அடியில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்த ஆயக்குடியை சேர்ந்த காளியம்மாள் (வயது 47) என்பவர் மீது மரக்கிளை பட்டதில் லேசான காயம் அடைந்தார். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பழனி தட்டான்குளத்தில், கணேசன் என்பவரது வீட்டின் மேற்கூரை (ஆஸ்பெஸ்டாஸ்) காற்றுக்கு அப்படியே பறந்து விழுந்து சேதமடைந்தது.

இதற்கிடையே கீரனூரில் இருந்து பழனி நோக்கி வந்த அரசு டவுன் பஸ் நரிக்கல்பட்டி பகுதியில் வந்தபோது, சூறாவளி காற்றால் பஸ்சின் மேற்கூரை திடீரென பெயர்ந்து தொங்கியது. இதை கண்டதும் பயணிகள் பதற்றத்தில் அலறினர். இதனையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பழனி பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு நேற்று மட்டும் சுமார் 15 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் விரைந்து சென்று அங்கு சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story