நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா.. திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந்தேதி விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 6.30 மணிக்கு தேரோட்டம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கப்படுகிறது. முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.
தேரோட்டத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.