தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 29 July 2024 11:37 AM GMT (Updated: 29 July 2024 11:42 AM GMT)

காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது.அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் துப்பாக்கிச் சூடு குறித்த சி.பி.ஐ. விசாரணை சரியில்லை என்றும் இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை. ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது. விசாரணை முடிவு பற்றி எந்த கவலையும் இல்லாமல் விசாரணை நடத்தினால் அறிக்கை நியாயமானதாக இருக்காது என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, தூத்துக்குடி சம்பவத்தில் உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆதாரங்களை போலீஸ் விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைப்பது எப்படி நியாயம்..? அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறை அவகாசம் கேட்டநிலையில், சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்டு உத்தரவிட்டது.


Next Story