திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பு இல்லை - திருமாவளவன்
திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பு இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக மற்றும் விசிக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இடையே எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை; அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை.
என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது. அதனால், திமுக - விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். ஏற்கெனவே தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன்; உட்கட்சி விவகாரம் என்பதால் உயர்நிலைக் குழுவில் உள்ளவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.