ஆடிப்பெருக்கு விழாவில் ராட்சத ராட்டினம் சாய்ந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் ராட்சத ராட்டினம் ஒன்று திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா, ஆடி மாதத்தின் 18-ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை என்ற கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலுக்கு காலை முதல் பக்தர்கள் வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அங்கு பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக சிறிய வகை ராட்டினம் முதல் ராட்சத ராட்டினங்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது. மாலை முதல் அந்த ராட்டினங்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் அங்கிருந்த ஒரு ராட்டினம் இயங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென பழுதாகி ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் ராட்டினத்தில் இருந்த பொதுமக்கள் பயத்தில் அலறினர்.
இதையடுத்து ராட்டினம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதில் சிக்கியிருந்தவர்களை ராட்டின ஆபரேட்டர்கள், போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். ராட்சத ராட்டினங்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்டதும், ராட்டினத்தில் 2 பேர் அமரும் இடத்தில் 4 பேர் அமர வைக்கப்பட்டதுமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். ஆடிப்பெருக்கு விழாவில் ராட்டினம் சாய்ந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.