ஐக்கிய அரபு மந்திரியுடன் ஜாகிங் சென்ற மா.சுப்பிரமணியன்


தினத்தந்தி 24 July 2024 10:32 AM IST (Updated: 24 July 2024 10:59 AM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளதாக அந்நாட்டின் பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் டூக் அல் மர்ரி கூறியுள்ளார்.

சென்னை,

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் டூக் அல் மர்ரி தலைமையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், அப்துல்லா பின் டூக் அல் மர்ரி சென்னையில் இன்று நடைபெறும் 'இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸ்' என்ற மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில், பெசன்ட் நகரில் இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன், அப்துல்லா பின் டூக் மற்றும் ஐக்கிய அரபு நாட்டின் பிரதிநிதிகள் ஜாகிங் பயிற்சி மேற்கொண்டனர்.தொடர்ந்து, சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து, அனைவரும் தேநீர் அருந்தினர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்துல்லா கூறியதாவது:

"தமிழக அமைச்சருடன் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டது மகிழ்வான தருணம்.ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவுகள், மிகப்பெரிய பொருளாதார உறவுகளில் ஒன்றாகும்.

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இருநாட்டின் வர்த்தகத்தில் 15% அதிகரித்துள்ளது. நிறைய முதலீடுகள் இந்தியாவுக்கு வருகின்றன. சென்னையில் இன்று ஒரு மாநாடு நடக்கிறது, எனவே தொழில்துறையில் உள்ள அனைவரையும் அழைக்கிறோம். புதிய பொருளாதாரங்களைப் பற்றி பேச உலகை ஒன்றிணைக்க விரும்புகிறோம்." எனத் தெரிவித்தார். இன்று சென்னை மாநாட்டில் பங்கேற்கும் அப்துல்லா, நாளை காலை கேரள மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.



Next Story