தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
x
தினத்தந்தி 11 Sep 2024 2:28 AM GMT (Updated: 11 Sep 2024 8:13 AM GMT)

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சென்னை,

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்குதல் நடத்தப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகின் மீது மோதி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் படகில் ஏறி ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதோடு 5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ வலைகளை பறித்துக்கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மீனவர்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினர். இந்த தாக்குதலில் கார்த்தி, சண்முகம், ராமையன், தேவராஜ் உட்பட 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story