கேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளை.. நாமக்கல்லில் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கும்பலா?
கேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றபோது நாமக்கல்லில் போலீசிடம் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கொள்ளையர்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
நாமக்கல்,
கேரள மாநிலம் திருச்சூரில் 3 வெவ்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில், வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றுள்ளனர். முதல் கொள்ளை திருச்சூர் அருகே உள்ள கோலழி என்ற இடத்தில் நடைபெற்றது. அங்குள்ள பாரத வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வெள்ளை நிற காரில் வந்த நான்கு நபர்கள் அடங்கிய கும்பல் இந்த திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த இந்த கும்பல், அங்கிருந்த கேமராவை சேதப்படுத்தி விட்டு இந்த திருட்டுகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. 2-வது கொள்ளை திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த சொர்ணூர் சாலையில் உள்ள அதே பாரத வங்கியின் ஏடிஎம் மையத்தில் நடைபெற்றது.இது போலவே அங்கிருந்த ஏடிஎம் எந்திரத்தை கேஸ் கட்டர் பயன்படுத்தி தகர்த்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். 3-வது கொள்ளை திருச்சூர் அருகே உள்ள இரிங்ஞாலக்குடா பகுதியில் மாம்பரணம் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை இரண்டு முதல் நான்கு மணிக்கு உள்ளே இந்த மூன்று திருட்டுகளும் நடைபெற்றுள்ளது.கொள்ளை கும்பல் தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கேரள போலீசார் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. மேலும் அந்த லாரி சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சினிமா பாணியில் போலீஸ் வாகனங்களைக் கொண்டு லாரியை துரத்திச் சென்ற போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஈரோடு செல்லும் சாலையில் உள்ள அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்தனர்.
லாரியில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததால், மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், கண்டெய்னர் லாரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் இருந்தது தெரியவந்தது.
அந்த லாரியில் மொத்தம் 7 கொள்ளையர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கொள்ளையர்களில் ஒருவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் அவரை சுட்டுக்கொலை செய்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
மற்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட கொள்ளையர்கள் அனைவரும் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த 'பவாரியா' கும்பலைச் சேர்ந்தவர்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய பிறகு இது குறித்த தகவல் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.