'அ.தி.மு.க.வில் புரட்சி வெடிக்கும்'' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி


அ.தி.மு.க.வில் புரட்சி வெடிக்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2024 1:45 PM IST (Updated: 10 Jun 2024 3:39 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள். இன்று கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் (பா.ஜனதா கட்சி) ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி. எங்களது கூட்டணி சிறப்பாக எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களது முதல்-அமைச்சர் 40-க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து 40-க்கு 40 என்ற சபதத்தை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

அ.தி.மு.க.வை பற்றி பேச எனக்கு (ரகுபதி) தகுதியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி கேட்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர். அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அ.தி.மு.க.வை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க.வை பற்றியும், முதல்-அமைச்சர் பற்றியும் விமர்சிப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இருக்கிறது என்றால் அ.தி.மு.க. பற்றி பேசுவதற்கு ரகுபதிக்கு நிச்சயம் தகுதி உண்டு. அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கி பா.ம.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு வங்கி தானே தவிர பா.ஜனதா கட்சி தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story