'மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்' - தர்மபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்


மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம் - தர்மபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 July 2024 6:15 AM IST (Updated: 11 July 2024 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஊரக பகுதிகளில் ''மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்'' தர்மபுரியில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், கடந்த சட்டசபை தேர்தலின் போது 'உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்' என்ற பெயரில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். இந்த மனுக்கள் மீது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

அதன்படி முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு மக்களிடம் இருந்து வாங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ''முதல்-அமைச்சரின் முகவரி'' என்ற பெயரில் ஒரு தனித்துறையை உருவாக்கினார். பின்னர் இந்த துறையின் மூலம் மக்கள் அளித்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்தார். முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை'' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வரும் அதே வேளையில், அரசின் சேவைகளும் அவர்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் விரும்பினார். அதற்காக முதல்-அமைச்சரின் முகவரி துறையின் கீழ் ''மக்களுடன் முதல்-அமைச்சர்" திட்டத்தை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கினார். முதல் கட்டமாக இந்த திட்டம், நகர்புறங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதற்காக நகர்புறங்களில் ஒவ்வொரு வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசின் 15 துறைகளின் கீழ் உள்ள 44 சேவைகள் பொதுமக்களுக்கு மிக எளிதாக வழங்கப்பட்டன.

அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த முகாம்கள் மூலம் மொத்தம் 8 லட்சத்து 74 ஆயிரம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த சூழ்நிலையில், ஊரக பகுதிகளிலும் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்'' செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி தவிர தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த முகாம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதற்கான விழா, நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசுகிறார்.

அதே நேரத்தில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், கலெக்டர்கள் தலைமையில் இந்த முகாம்கள் தொடங்குகிறது. அதில் எம்.பி.க்கள், எம் எல் ஏ க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் ஏற்கனவே கேட்டு கொண்டு உள்ளார். ஊரக பகுதிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 2,500 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

உங்கள் ஊரில், உங்கள் அரசு; 15 துறைகள், 44 சேவைகள்

முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற வேண்டும். இந்த சேவைகளுக்காக அவர்கள் நம்மை தேடி வரக்கூடாது. நாம் தான் அவர்களை தேடி செல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தான் ''உங்கள் ஊரில், உங்கள் அரசு'' என்ற நோக்கத்தின் அடிப்படையில் ''மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்'' செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் மிக எளிதாக பெற முடியும்.

இந்த முகாம்களில் தமிழ்நாடு மின்சார வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு-பால்வளம்-மீன்வளம்-மீனவர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் ஆகிய 15 துறைகளின் 44 சேவைகள் குறித்து மனு அளிக்கலாம்.

இந்த மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு அரசின் சேவைகளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story