பிரபல 'யூடியூபர்' இர்பானை சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டிய போலீசார்


பிரபல யூடியூபர் இர்பானை சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டிய போலீசார்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Aug 2024 12:54 AM IST (Updated: 4 Aug 2024 1:12 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பிரபல யூடியூபர் இர்பானுக்கு ரூ,1,500 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை,

பிரபல நடிகர் பிரசாந்த் 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி பேட்டியளித்ததால் போலீசாரின் அபராத நடவடிக்கையில் சிக்கி இருந்தார்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் இர்பான் 'ஹெல்மெட்' அணியாமலும், முறையான 'நம்பர் பிளேட்' இல்லாமலும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வீடியோவை சென்னை போலீஸ்துறையின் சமூக வலைத்தளத்தில் ஒருவர் இணைத்து, இவர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதைத்தொடர்ந்து 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதற்காக ரூ,1,000-ம், முறையான 'நம்பர் பிளேட்' இல்லாமல் வாகனத்தை ஓட்டி சென்றதற்காக ரூ,500-ம் என மொத்தம் 1,500 ரூபாயை இர்பானுக்கு அபராதமாக அடையார் போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர்.

முன்னதாக தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் இர்பான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையானது. அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு இர்பான் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story