மகா விஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார்


மகா விஷ்ணுவை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார்
x
தினத்தந்தி 12 Sep 2024 2:53 AM GMT (Updated: 12 Sep 2024 3:06 AM GMT)

மகா விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளி ஒன்றில் ஆன்மிக சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகா விஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவதூறுப்படுத்தும் நோக்கில் சில கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சைதாபேட்டை போலீசில் புகார் செய்யபட்டது.

அதன்பேரில் போலீசார் மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 7-ந் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு, சைதாப்பேட்டை 4-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மகா விஷ்ணுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம், மகா விஷ்ணுவிடம் 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர். திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகா விஷ்ணுவின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின்பேரில் அவர் பேசினார்? என்பது குறித்து நடத்தப்பட்டு வருகிறது.


Next Story