விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு


விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு
x
தினத்தந்தி 31 May 2024 11:17 AM IST (Updated: 31 May 2024 11:41 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குமரி,

நாடாளுமன்ற தேர்தல் நாளை (சனிக்கிழமை) முடிவடையும் நிலையில் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார்.

அதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்தார். முதலில் பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தபடி பிரதமர் மோடி இருந்தார். உடலில் சால்வையும் அணிந்திருந்தார்.

அதன்பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் தியான மண்டபத்துக்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். அவர் அங்கு நாளை (சனிக்கிழமை) பிற்பகல் வரை 3 நாட்கள் தங்கியிருந்து தியானம் செய்கிறார். இந்த தியான நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் கன்னியாகுமரியிலும், விவேகானந்தர் மண்டபத்திலும் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 2-வது நாளாக பிரதமர் மோடி இன்றும் தியானம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிகாலையில் தியானத்திற்கு முன் பிரதமர் மோடி சூரிய உதயத்தை கண்டுகளித்து சூரிய பகவானை வணங்கினார். பின்னர் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்றபடி பிரதமர் மோடி பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.


Next Story