பாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


பாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Sep 2024 4:23 PM GMT (Updated: 3 Sep 2024 4:23 PM GMT)

பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கல பதக்கமும், எஸ்.எச்6 பிரிவில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "எங்கள் பாரா-பேட்மிண்டன் சாம்பியன்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் நம் நாட்டிற்காக பதக்கங்களை வென்றதற்காக தமிழ்நாட்டிலிருந்து துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யாஸ்ரீசிவன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.

நமது மாநில அரசு வழங்கும் அசைக்க முடியாத ஆதரவிற்கு எங்கள் துணை விளையாட்டு வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மேலும் பாராட்டுகளை பெற்றுத் தருவதில் அவர்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். அவர்களின் சிறப்பான பணிகளில் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்தோம்" என்று அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




Next Story