பாம்பன் புதிய ரெயில் பாலம்: அடுத்த மாதம் போக்குவரத்து தொடங்குகிறது


பாம்பன் புதிய ரெயில் பாலம்: அடுத்த மாதம் போக்குவரத்து தொடங்குகிறது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Sep 2024 9:43 PM GMT (Updated: 12 Sep 2024 3:28 AM GMT)

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் விரைவில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மண்டபம்,

தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது பாம்பன் ரெயில் பாலம். ராமேசுவரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல் வழி வணிகத்தில் நம் நாடு தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது.அதற்கேற்ப கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது.

நூற்றாண்டை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அந்த பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ரூ.545 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்தது. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. பாம்பன் புதிய ரெயில் பாலம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் முடிந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தில் அமைத்த தூக்குப்பாலத்தை திறந்து மூடி, ரெயில்களை இயக்குவதற்கான சோதனை நடத்தப்பட இருக்கிறது. மேலும் ரெயில் போக்குவரத்து பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வும் நடக்க உள்ளது.

அவரது ஆய்வு முடிந்து ரெயில் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் அந்த பாதையில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி அல்லது அக்டோபர் 15-ந் தேதி பாம்பன் பாலத்தை தொடங்கி வைக்கும் விழா நடக்கலாம் என தெரிகிறது.

இதற்கிடையே புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களையும் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


Next Story