இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு


ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 3 July 2024 3:15 PM IST (Updated: 3 July 2024 3:43 PM IST)
t-max-icont-min-icon

பட்டப்படிப்பு, திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ,மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி நடத்திய போராட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்குத்தான் நீட் போன்ற நுழைவுத்தேர்வு வந்துள்ளது. சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் எங்களில் பலர் டாக்டர் ஆகினர். குலம் கோத்திர பெருமையால் டாக்டர் ஆகவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நான் படித்தபோது பி.ஏ.படித்தாலே போர்டு வைத்துக்கொள்வார்கள். இப்போது நாய் கூட பி.ஏ.பட்டம் வாங்குகிறது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது என்றார்.

ஆர்.எஸ்.பாரதி கூறியது சர்ச்சையானதையடுத்து, நாய் கூட பட்டம் பெறுகிறது என்பதை உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும், கல்வி அனைவருக்குமானதாகிவிட்டது என்ற அர்த்தத்தில் கூறினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story