கள்ளத்தொடர்பை கண்டித்த வடமாநில பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்


கள்ளத்தொடர்பை கண்டித்த வடமாநில பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 July 2024 1:53 PM IST (Updated: 5 July 2024 4:10 PM IST)
t-max-icont-min-icon

வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், புகழூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் முருகையன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் பால் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் கடந்த 1-ந்தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த புக்கர் மஜி, அவரது மனைவி சண்மதிதேவி (வயது 46) மற்றும் சண்மதிதேவியின் சகோதரர் கிருஷ்ண மஜி ஆகியோர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் பால் பண்ணையில் உள்ள ஒரு தகர கொட்டகை வீட்டில் தங்கி, வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் புக்கர் மஜிக்கு வடமாநிலத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் புக்கர் மஜிக்கும், சண்மதிதேவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புக்கர்மஜி கட்டையாலும், ஹாலோபிளாக் கல்லாலும் சண்மதிதேவியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து புக்கர்மஜி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமஜி, பால் பண்ணை உரிமையாளர் முருகையனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஓம் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சண்மதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய புக்கர்மஜியை வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்ததால் வடமாநில பெண்ணை கணவரே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story