ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்


ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 6 July 2024 7:32 PM IST (Updated: 6 July 2024 7:46 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நல்லடக்கம் செய்ய இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story