'நீட் தேர்வில் முறைகேடு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது' - மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் முறைகேடு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் தேர்வு முறைகேடு குறித்து தமிழக அரசின் சட்டத்துறை சார்பில் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சமுதாயம் பொங்கி எழுந்து வருகிறது.
நாடு முழுவதும் 23 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சட்டத்துறை சார்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.