தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தலித் ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராமதாஸ்


தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தலித் ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராமதாஸ்
x
தினத்தந்தி 16 Aug 2024 10:22 AM GMT (Updated: 16 Aug 2024 10:29 AM GMT)

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தலித் ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும் தலித் ஒருவர் முதல்-அமைச்சராக முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சர் ஆக்கப்படுவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதும், தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகநீதி சார்ந்து இத்தகைய விவாதங்கள் எழுவது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சராகவே முடியாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக, அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை, அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பட்டியலின மக்களிடமிருந்தே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் என்றால் அது வன்னியர்கள்தான். தனிப்பெரும் சமுதாயத் தொகுப்பு என்றால் அது பட்டியலினம்தான். இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சமுதாயங்களையும் சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சராக வர முடியாததற்கு காரணம் என்ன? என்பதை இரு பெரும் சமுதாயங்களும், அவற்றின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் தான் சிந்திக்க வேண்டும்; விழிப்புணர்வு பெற வேண்டும்.

இரு சமுதாயங்களும் இணைந்தால்தான் இரு சமூகங்களுமே வளர முடியும் என்பதுதான் எனது அசைக்க முடியாத நிலைப்பாடு. தமிழ்நாட்டின் 57 ஆண்டு திராவிட ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த எவராவது துணை முதல்-அமைச்சராக முடிந்திருக்கிறதா?அதிகாரம் மிக்க அமைச்சர் பொறுப்புகளுக்கு வர முடிந்ததா? ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற துறைகளை மட்டுமே ஒதுக்கி அவர்களை அமைச்சரவையின் அடிமட்டத்தில் வைத்துதான் அவமதிக்கின்றன திராவிடக் கட்சிகள். இன்றைய திமுக ஆட்சியிலும் இதே நிலை தான் தொடருகிறது.

எனவே தான் சொல்கிறேன்.... பட்டியலினத்தவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராவது சாத்தியமற்றது அல்ல. நம்மால் முடியாது, நம்மால் முடியாது என்று சதிவலையில் மயங்கி கிடப்பதை விடுத்து, நம்மால் முடியும் என்று பட்டியலினத்தவர் நினைக்க வேண்டும். நாம் வீழ்ந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்; நாம் எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வும், சமூக ஒற்றுமையும் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அந்த மாற்றம் நிகழும் நாள் தான் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story