அரசு குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது


அரசு குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது
x
தினத்தந்தி 11 July 2024 4:36 AM GMT (Updated: 11 July 2024 4:40 AM GMT)

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. வாக இருந்த தி. மு. க. வை சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தி. மு. க. வை சேர்ந்த அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா. ம. க வை சேர்ந்த சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வும், அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி. க. வும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால், இங்கு தி.மு.க. , பா.ம.க. , நாம் தமிழர் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவில் விக்கிரவாண்டி தொகுதியில் 82.48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரச்சார மேடையில் தி.மு.க. அரசு மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story