விண்டோஸ் இயங்குதளத்தில் பாதிப்பு ஏற்பட்டது எப்படி? புதிய தகவல்கள்


Microsoft on global outage
x
தினத்தந்தி 19 July 2024 5:54 PM IST (Updated: 19 July 2024 6:17 PM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 72.22 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் இன்று மதியம் முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் எரர் (Blue Screen of Death) தோன்றியது.

இதன் காரணமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டனர். விண்டோஸ் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில நாடுகளில் வங்கி மற்றும் பங்குச்சந்தைகள் முடங்கின. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது.

இதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக கம்ப்யூட்டர்களை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. அதுபோன்ற ஒரு நிறுவனம் தான் கிரவுட்ஸ்டிரைக் (CrowdStrike). அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் இன்று வெளியிட்ட அப்டேட்தான் உலக அளவில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பிற்காக பால்கன் எனப்படும் சென்சார் அடிப்படையிலான முக்கிய சாப்ட்வேரை கிரவுட்ஸ்டிரைக் உருவாக்கி உள்ளது. ஆனால் அதை விண்டோசில் அப்டேட் செய்து இணைத்தபோது பால்கன் சென்சார் செயலிழந்து, விண்டோசுடன் முரண்படுவதால் புளூ ஸ்கிரீன் எரர் தோன்றி உள்ளது.

2011-ல் தொடங்கப்பட்ட கிரவுட்ஸ்டிரைக் உலக அளவில் முன்னணி சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. 2015-ம் ஆண்டு அமெரிக்க முன்னணி நிறுவனங்களில் சீன ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியதை இந்த நிறுவனம் அம்பலப்படுத்தியது குறிப்பிடதக்கது.

கம்ப்யூட்டர் சர்வர்களில் ஆட்டோ அப்டேட் வைத்திருந்தவர்கள் தான் முதலில் கிரவுட்ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டனர். இந்நிறுவனம் வெளியிட்ட அப்டேட் மற்ற நிறுவனங்களின் இயங்குதளங்களை பாதித்ததாக தகவல் இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 இயங்குதளம் மட்டுமே பாதிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 72.22 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாகவே உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தன் பங்கு எதுவும் இல்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.இன்று இரவுக்குள் நிலைமை சீராகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அவர்கள் தெரிவித்தபடி நிலைமை சீராகாவிட்டால் உலக அளவில் பெரும் தாக்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தக்கூடும்.

இதற்கிடையே இந்த விவகாரம் காரணமாக மைக்ரோசாப்ட் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story