விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது


விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Sept 2024 7:27 AM IST (Updated: 15 Sept 2024 11:17 AM IST)
t-max-icont-min-icon

விம்கோ நகர் - விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான வழித்தடம், சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நேரங்களில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், விம்கோநகர் - விமான நிலையம் நீல வழித்தடத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான தடத்தில் மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவன பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னை விம்கோ நகர் மற்றும் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தற்போது சீராகி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில், "தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. புளூ லைனில் உள்ள விம்கோ நகர் டிப்போ மற்றும் விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கி உள்ளன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story