திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற மேஸ்திரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஜெகன் ஒவ்வொரு வருடமும் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி.கஸ்பா கே.எம்.சாமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கவியரசி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெகன் ஒவ்வொரு வருடமும் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் பிறந்ததில் இருந்து விரதம் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் காவடி எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் திருத்தணிக்கு சென்றார். வாலாஜா பஸ்நிலையத்தில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் பாதியில் திரும்பி மீண்டும் ஆம்பூருக்கு வந்துள்ளார்.
பின்னர் ஆம்பூர் ரெயில் நிலையம் அருகில் நடராஜபுரம் பகுதிக்கு சென்று சென்னை- பெங்களூரு மார்க்கத்தில் சென்ற சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ெஜகன் காவடியை சாலையோரம் வைத்து விட்டு தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.