மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்தியவர் கைது
பணம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய 3 மணி நேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மதுரை,
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி (வயது 40). இவருக்கு, பைபாஸ் சாலை பகுதியில் வணிக வளாகம் மற்றும் வீடுகள் உள்ளன. இவருடைய மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவான்.
நேற்று ஆட்டோவில் அந்த மாணவன் பள்ளிக்கு சென்ற நிலையில், ஆட்டோவை நடுவழியில் மறித்த ஒரு கும்பல், ஆட்டோ டிரைவரையும், மாணவனையும் கத்தியை காட்டி மிரட்டி, அதே ஆட்டோவில் கடத்திச் சென்றது. இந்த ஆட்டோவை பின்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த சிலர் காரில் வந்துள்ளனர்.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மைதிலி ராஜலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கொடுத்தால் மட்டுமே மகனை உயிரோடு விடுவோம். இல்லை என்றால், கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மைதிலி ராஜலட்சுமி, இதுபற்றி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் சிறுவனை கடத்திய கும்பல் எங்குள்ளனர்? என்பதை செல்போன் சிக்னல் மூலம் அறிந்தனர்.
அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அந்த கும்பல், மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை, நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் விட்டுவிட்டு தப்பிச்சென்றது. இதனையடுத்து 3 மணி நேரத்தில் சிறுவனையும், ஆட்டோ டிரைவர் பால்பாண்டியையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். ஆட்டோவும் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். ஆட்டோ டிரைவர் பால்பாண்டியிடமும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பணம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில், குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவனை கடத்தியதாக கிஷோர் என்ற நபரை கைதுசெய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.