வீட்டுப்பாடம் எழுத உதவியதில் நெருக்கம்... பிளஸ்-2 மாணவனுடன் அறை எடுத்து தங்கிய ஆசிரியை


வீட்டுப்பாடம் எழுத உதவியதில் நெருக்கம்... பிளஸ்-2 மாணவனுடன் அறை எடுத்து தங்கிய ஆசிரியை
x
தினத்தந்தி 22 Jun 2024 10:36 PM GMT (Updated: 23 Jun 2024 1:50 AM GMT)

மாணவனுக்கு வீட்டுப்பாடங்கள் எழுத ஆசிரியை உதவியது, அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இந்தநிலையில் திடீரென அந்த மாணவர் மாயமானார். இதுகுறித்து மாணவரின் தந்தை ஆவியூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

அந்த மாணவர் படித்த பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றியவர் பாத்திமாகனி (வயது40). இவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பாத்திமா கனிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த மாணவன் பிளஸ்-2 படித்தபோது, வீட்டு பாடங்களை சரிவர எழுதி வராமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவனுக்கு வீட்டுப்பாடங்கள் எழுத பாத்திமா கனி உதவியுள்ளார். இது அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பள்ளி நிர்வாகம், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மற்றொரு பள்ளிக்கு, பாத்திமாகனி மாற்றப்பட்டார். ஆனால், அவர் அந்த பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவனும், ஆசிரியையும் புதுச்சேரிக்கு சென்றனர். அவர்கள் அங்கிருப்பதை அறிந்த போலீசார், புதுச்சேரி சென்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 நாட்களாக புதுச்சேரி பகுதியில் ஆசிரியை பாத்திமாகனியும், மாணவனும் அறை எடுத்து தங்கி இருந்ததும், மாணவனை கல்லூரியில் சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. ஆசிரியை பாத்திமாகனியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Next Story