கோயம்பேட்டில் 10 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம்: கூலித்தொழிலாளி கைது


கோயம்பேட்டில்  10 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம்: கூலித்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 4 July 2024 1:16 PM IST (Updated: 4 July 2024 4:16 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பஸ் தீ பிடித்து எரிந்த விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த பழனிமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

கோயம்பேடு பகுதியில் அங்காடி நிர்வாக குழுவிற்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஆம்னி பஸ் மற்றும் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதன் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆட்டோக்கள், வேன், கார் வாகனங்களில் தீ வேகமாக பரவிய நிலையில் அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. புகை விண்ணை முட்டும் அளவிற்கு பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ், ஆட்டோ உட்பட 10 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பஸ்க்குள் சென்ற ஒருவர் தீ வைத்துவிட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அந்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பஸ்க்குள் சென்று தீ வைத்த நபர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிமுத்து என்பது தெரியவந்தது. இவர் கோயம்பேடு அங்காடியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பீடி குடிப்பதற்காக பஸ்க்குள் வந்த போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். எனினும் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

1 More update

Next Story