கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம்: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை


கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம்: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2024 9:54 AM IST (Updated: 21 Aug 2024 10:13 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக என்.சி.சி. முகாம் நடத்திய சிவராமனை போலீசார் கைது செய்தனர். மேலும் முகாம் நடத்த உடந்தையாக இருந்ததாகவும், சிவராமன் செய்த பாதக செயலை மறைக்க துணை போனதாகவும் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சிவராமனின் கூட்டாளிகள் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்துவதை உறுதி செய்யுமாறு சென்னை டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story