கள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தினத்தந்தி 21 Jun 2024 5:52 PM IST (Updated: 21 Jun 2024 6:49 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

சென்னை,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சாராயம், மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கள்ளசாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அவற்றைத் தீவிரப்படுத்துவது குறித்தும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Next Story