'வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது' - சசிகலா


வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது - சசிகலா
x
தினத்தந்தி 6 Aug 2024 10:26 PM GMT (Updated: 6 Aug 2024 10:50 PM GMT)

வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை 2 மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை தமிழக அரசு 2 மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தி.மு.க. தலைமையிலான அரசு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வீட்டு வரைபட அனுமதி கட்டணத்தை எவ்வித அறிவிப்பும் இன்றி, திடீரென்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதன் மூலம் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவதும், புதிய வீடு வாங்குகின்ற கனவும் கேள்விக்குறியாகியிருப்பது தி.மு.க. தலைமையிலான அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, நிலங்களின் வழிகாட்டு மதிப்பு உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு வழிகளில் மனசாட்சியின்றி மக்களிடமிருந்தே வசூலித்து அவர்களை நாள்தோறும் கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கான வீட்டு வரைபட அனுமதி கட்டணத்தையும் 112% அளவுக்கு இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து இருப்பதால் புதிய வீடுகளின் விலை தாறுமாறாக அதிகரிக்கும், சொந்தமாக வீடு கட்டுவதற்கும் இயலாத நிலை ஏற்படும் என சாமானிய, நடுத்தர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2,500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3,500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகிறது. இதன் மூலம் ஏழை எளிய சாமானிய, நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே போய்விடும்.

தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர மக்கள் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட, வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தி.மு.க. அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story