குற்றால அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை


குற்றால அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 16 July 2024 4:15 AM GMT (Updated: 16 July 2024 7:51 AM GMT)

கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3-வது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story