எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு - மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்


எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு  - மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்
x
தினத்தந்தி 12 Oct 2024 12:32 AM IST (Updated: 12 Oct 2024 11:34 AM IST)
t-max-icont-min-icon

19 பேர் மட்டும் காயமடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியுள்ளார்.

சென்னை,

எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டு வட்டத்தில் உள்ள கவரப்பேட்டையில் நேற்று இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் செல்லக்கூடிய பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. அதில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் 1300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடனேயே மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை இணைந்து சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பயணிகள் ரெயிலில் இருந்து ஒவ்வொருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதில் 19 பேருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் தீவிர காயம் உள்ளவர்களுக்கு ஸ்டாலின்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான காயம் உள்ளவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது. உள்ளூர் மக்கள் உதவியுடன் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்றது. ரெயில் பயணிகள் தங்குவதற்கு 3 மண்டபங்களில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து ரெயில்வே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் விசாரணை மேற்கொண்டு உரிய பதிலை அளிப்பார்கள். ரெயில் விபத்தில் அனைவரும் வெற்றிகரமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story