'தி கோட்' பட போஸ்டர்களில் கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் - த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்


தி கோட் பட போஸ்டர்களில் கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் - த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2024 3:28 AM GMT (Updated: 7 Aug 2024 6:13 AM GMT)

தமிழக வெற்றிக் கழகம் என்று பதிவு செய்யாமல் விஜய் மக்கள் இயக்கம் என பதிவு செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் கடந்த ஆக., 3ம் தேதியன்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி பட வெளியீட்டை முன்னிட்டு நோட்டீஸ், பேனர்கள் ஏதேனும் வைத்தால், அதில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று பதிவு செய்யாமல் 'விஜய் மக்கள் இயக்கம்' என பதிவு செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்பது அரசியல் கட்சி என்பதால் அரசியலுக்கு மட்டுமே கட்சி பெயரை பயன்படுத்த வேண்டும் என்றும், திரைப்படங்களுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story