தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்: இளைஞரணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


தினத்தந்தி 21 Jan 2024 9:19 AM IST (Updated: 19 Sept 2024 5:24 PM IST)
t-max-icont-min-icon

திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சேலம்,

Live Updates

  • 21 Jan 2024 11:00 AM IST

    சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்த்து - பிரமிக்க வைத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்.




  • 21 Jan 2024 10:27 AM IST

    கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும் - திமுக இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

    திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அப்போது இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:-

    * பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞர் அணி முன்னெடுக்கும்

    * கவர்னர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும்.

    * கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 

    * நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக போராடும். நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்.

    * விசாரணை புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி மத்திய அரசு விடும் மிரட்டலுக்கு கடும் கண்டனம்.

    * தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    * பாஜக ஆட்சியை வீழ்த்திடவே திமுக இளைஞரணி செயல்படும்.

    * ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

    * குலக்கல்வியை எதிர்த்து இளைஞர் அணி போராட்டம் தொடரும்.

    * பல்கலைக்கழக வேந்தராக கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும்.

  • 21 Jan 2024 10:17 AM IST

    நீட் விலக்கு நம் இலக்கு:

    நீட் தேர்வுக்கு எதிராக 50 நாட்களில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்து அட்டைகள் மாநாட்டு திடலில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BANNEET என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

  • 21 Jan 2024 10:12 AM IST

    முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

  • 21 Jan 2024 9:47 AM IST

    முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!” என்று தெரிவித்துள்ளார்.

  • 21 Jan 2024 9:21 AM IST

    திமுக இளைஞர் அணி மாநாடு தொடக்கம்:-

    திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்த நிலையில், 2-வது இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக திமுக கட்சி கொடியேற்றப்பட்டது. கொடியை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டில் பங்கேற்க சாரை சாரையாக தொண்டர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பு பணியில் மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    மாநாட்டின் நிகழ்ச்சிகள் விவரம்:-

    9.45 மணிக்கு மாநாட்டு தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்யப்படுகிறார். 10 மணிக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றுகிறார். தொடர்ந்து 10.15 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. மாநாட்டு திறப்பாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. பேசுகிறார்.

    மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம் உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் கருத்துரை வழங்குகின்றனர். மாலை 5.30 மணி அளவில் கனிமொழி எம்.பி. பேசுகிறார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகின்றனர்.

    மாலை 6.30 மணிக்கு இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவருக்கான உரையாற்றுகிறார். 6.45 மணிக்கு பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்தி பேசுகிறார். இரவு 7 மணிக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். 7.30 மணிக்கு விழா நிறைவு பேரூரையாக முதல்- அமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்

    இதற்கிடையே மாநாட்டில் சிறப்பு நிகழ்வுகளாக மாநாட்டு மலர், 10 பாசறை நூல்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் மூத்த முன்னோடிகள் மரியாதை செய்யப்படுகிறார்கள். நீட் விலக்கு நம் இலக்கு தபால் அட்டை ஒப்படைக்கப்படுகிறது.


Next Story