தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


LIVE
தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 Sep 2024 12:24 PM GMT (Updated: 28 Sep 2024 4:01 PM GMT)

காஞ்சிபுரத்தில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கியது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற இந்த விழாவானது, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளதுடன் உரையாற்றினர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.


Live Updates

  • 28 Sep 2024 3:43 PM GMT

    திமுக பவள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது;

    “அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவர் உருவாக்கிய இயக்கத்தின் பவள விழாவை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன். இது திமுகவிற்கும், அண்ணாவிற்கும் கிடைத்துள்ள பெருமை. அண்ணா வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தியவர் கலைஞர். தி.மு.க. என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது.

    தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் இந்தியா கூட்டணி உருவானது. சில கூட்டணி தேர்தல் சமயத்தில் மட்டும்தானுள்ளது. தேர்தல் முடிந்தால் கூட்டணியே முடிந்துப்போய் விடுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகைமையை வளர்க்க முடியாதா என சிலர் நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்பி விஷம வேலைகளை செய்தனர். பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை.

    இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. நாடாளுமன்ற தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலை கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

    திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறது. அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சியை மீட்டெடுக்க உறுதியேற்போம்.”

    இவ்வாறு அவர் பேசினார்.  

  • 28 Sep 2024 2:55 PM GMT

    100 ஆண்டுகளை கடந்தும் திமுக செயல்படும் - செல்வப்பெருந்தகை

    திமுக பவளவிழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பருந்தகை பேசியதாவது;

    மாநில கட்சிகளில் பழம்பெரும் கட்சி திமுக. 100 ஆண்டுகளை கடந்தும் திமுக செயல்படும். இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி இருக்கும். மாணவர் சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் முதல் அமைச்சர் செயல்பட்டு வருகிறார். அன்பால் அனைத்தையும் வென்று வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என்றார். 

  • 28 Sep 2024 1:48 PM GMT

    அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க.- பவளவிழா பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

    திமுக பவள விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது;

    திராவிட முன்னேற்ற கழகன் 75 ஆண்டுகளாக வீறு கொண்டு வெற்றி நடைபோடுகிறது. பெரியாரின் கொள்கை வழியில் திமுக தொடர்ந்து இயங்கி வருகிறது. அரசியல் முதிர்ச்சி, கொள்கை முதிர்ச்சி கொண்ட கட்சி திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடும் கட்சி திமுக. சமூக நீதி ஆட்சியை திமுக நடத்திக்கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் தி.மு.க.

    நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. சுயமரியாதையை அழுத்தமாக நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி. திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என பிரகடனப்படுத்தியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பேராளுமை கொண்ட தலைவராக முதல்-அமைச்சர் திகழ்கிறார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் திமுக தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.” என்று பேசினார்.  

  • 28 Sep 2024 1:22 PM GMT

    தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - கருணாஸ் பேச்சு

    திமுக பவள விழாவில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பங்கேற்று உரையாற்றியதாவது;

    “திமுக என்ற இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது, திமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை என்றும் உறுதுணையாக இருக்கும். 100 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போதும் திமுக ஆட்சியில் இருக்கும், அப்போது முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருப்பார்.” என்று கூறினார். 

  • 28 Sep 2024 1:16 PM GMT

    திமுக பவள விழாவில் கலந்து கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்- செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி

    சென்னை,

    ஜாமீனில் வெளியே வந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக பவள விழாவில் கலந்துகொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி, தமிழினத்தலைவர் கலைஞர் கட்டிக்காத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .

    புரட்சிக்கரமான கொள்கைகளால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தொண்டனாக கலந்துக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story