3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்


3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2024 2:18 PM GMT (Updated: 19 Jun 2024 7:14 AM GMT)

குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 14,697 கோடி மதிப்பிலான 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 64.62 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டில் விலைவாசியினைக் கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்துடன் கூடிய உணவினை உறுதிப்படுத்திடும் நோக்கிலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2007-ம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் இந்நாள் வரை ரூ.7,381.91 கோடி மதிப்பிலான 7,00,396 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் ரூ..7315.96 கோடி மதிப்பிலான 64,62,50,000 பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

2024 மே மாதத்திற்கான பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் 100 விழுக்காடு அனைத்து கிடங்குகளுக்கும் அனுப்பி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத் தேவையில் 78,44,160 பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பாக்கெட்டுகளை வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. துவரம் பருப்பினைப் பொறுத்தவரையில் மே மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் இன்றுவரை 1,37,79,000 கிலோ வழங்கப்பட்டு மீதமும் விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத் தேவையில் 40,16,000 கிலோ இதுவரை வழங்கப்பட்டு மீதியை வழங்கும் பணி விரைவு படுத்தப்பட்டு வருகிறது.

மே மாதத்திற்குரிய பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், ஜூன் மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் 2017-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படாமல் இருந்த நிலை இருந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளினால் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களைத் திரித்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் முறையானதல்ல என்பதோடு 2024 மே மற்றும் ஜூன் மாதங்களின் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீடு முழுமையாக நகர்வு செய்யப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது."

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story